மேக்ஸ்வின் பவுல் ராயன்

ஈழத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை, சர்வதேசச் சட்டத்தின் துல்லியத்துடனும் போர்க் கற்கைகளின் பகுப்பாய்வு நோக்குடனும் ஆராய்ந்து வரும் இளந்தலைமுறை ஆய்வாளர்களில் ஒருவர். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தற்போது இலண்டன் கிங்ஸ் கல்லூரியின் (King’s College London) போர்க் கற்கைகள் துறையில் (Department of War Studies) கலாநிதிப் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். “கிளர்ச்சி ஒடுக்கல் எப்போது இனப்படுகொலையாக மாறுகிறது?” (When Does Counterinsurgency Become Genocidal: Sri Lanka as a Case Study) என்ற வினாவை மையமாகக் கொண்ட இவரது ஆய்வு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழ் மக்களின் வாழ்வு எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டது என்பதைக் கட்டாய இடப்பெயர்வு, பொருளாதாரத் தடை, இலக்குவைத்த தாக்குதல்கள், அவசரகாலச் சட்டங்கள் ஆகிய தளங்களில் பகுப்பாய்வு செய்கிறது.

ஒடிசா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் (National Law University Odisha) B.A. LL.B. பட்டம் பெற்ற இவர், சுவீடனின் லுண்ட் பல்கலைக்கழகத்தில் (Lund University) ரவுல் வாலன்பர்க் மனித உரிமைகள் நிறுவனத்துடன் (Raoul Wallenberg Institute) இணைந்து சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் LL.M. பட்டம் பெற்றார். அங்கு இவர் சமர்ப்பித்த “இலங்கையில் கூட்டு இனப்படுகொலை நோக்கம்” (Collective Genocidal Intent in Sri Lanka) என்ற ஆய்வேடு, முள்ளிவாய்க்கால் வரையிலான இறுதிக்கட்டப் போரில் நிகழ்ந்த பெருந்திரள் கொலைகளைச் சர்வதேசக் குற்றவியல் சட்ட நோக்கில் பகுப்பாய்வு செய்கிறது. இது பின்னர் நூலாகவும் வெளிவந்தது. கலாநிதி ஆய்வுக்கு முன்னர், போர்க் குற்றங்களை ஆவணப்படுத்தும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுடன் பணியாற்றியுள்ளார். தற்போது, ஈழத் தமிழர்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காகச் செயற்படும் தமிழ் உரிமைகள் குழுவின் (Tamil Rights Group) சட்டப் பணிப்பாளராகவும் (Legal Director) பணியாற்றி வருகிறார்.

கிங்ஸ் கல்லூரியில் பட்டதாரி கற்பித்தல் உதவியாளராக (Graduate Teaching Assistant) சர்வதேசச் சட்டம், மனித உரிமைகள், மனிதாபிமானத் தலையீடு ஆகிய பாடங்களை இவர் கற்பித்து வருகிறார். அதற்காக 2026இல் கல்லூரியின் கல்விச் சிறப்பு விருதுக்கு (King’s Education Awards) மாணவர்களால் பரிந்துரைக்கப்பட்டார். கிங்ஸ் கல்லூரியின் போர்க் குற்ற ஆய்வுக் குழு (War Crimes Research Group), முரண்பாடு, பாதுகாப்பு, அபிவிருத்தி ஆய்வுக் குழு ஆகியவற்றிலும், சர்வதேச மூலோபாயக் கற்கைகள் நிறுவனத்திலும் (IISS) இவர் உறுப்பினர்.

இவரது எழுத்துகளில் The Politics of Naming and the Costs of Denial: Genocide in Sri Lanka (PKI Global Justice Journal, 2025) என்ற மதிப்பாய்வுக்குட்பட்ட (peer-reviewed) ஆய்வுக் கட்டுரையும், இலங்கைப் போரில் இந்தியாவின் இரகசிய இராணுவப் பங்களிப்பைத் திறந்த மூல ஆதாரங்களின் (OSINT) ஊடாக வெளிக்கொணர்ந்த The Eye Over the Vanni: Inside Project Drishti (2026) என்ற புலனாய்வும் குறிப்பிடத்தக்கவை. போருக்குப் பிந்திய வடக்கு–கிழக்கின் இராணுவ ஆட்சிமுறை, காசா போரை நியாயப்படுத்த “இலங்கை மாதிரி” முன்வைக்கப்படுவதன் அபாயங்கள் போன்ற விடயங்களில் E-International Relations, Tamil Guardian ஆகிய தளங்களிலும் எழுதியுள்ளார்.

பாதிக்கப்பட்டோரின் துயரத்தைப் பதிவு செய்வதோடு நின்றுவிடாமல், வன்முறையை நிகழ்த்திய அரசு, அதன் இராணுவ மூலோபாயம், சட்டங்கள், ஊடகங்கள், மறுப்பு அரசியல் ஆகியவற்றையே ஆய்வின் மையமாக்குவது இவரது அணுகுமுறையின் தனித்துவமாகும்.